×

கொடைக்கானல்-பூம்பாறை இடையே மலைச்சாலையில் ராட்சத மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல்-பூம்பாறை சாலையில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து மேல்மலைப்பகுதியான பூம்பாறைக்கு செல்லும் சாலையில் கிருஷ்ணன்கோவில் உள்ளது. இப்பகுதியில் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. இதில் கொடைக்கானல்-பூம்பாறை மலைச்சாலையில் ராட்சத மரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் கொடைக்கானலுக்கும், பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், பழம்புத்தூர், பூண்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்தனர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினர்  சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி  அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Kodaikanal ,hill ,Kodaikanal-Poompara , Kodaikanal, hilltop, giant tree fell, traffic, impact
× RELATED கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து!!