சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கான ஊசி மருந்து இல்லை என கூறி நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 ஒன்றிய தலைநகரங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 35 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கான அனைத்து சிகிச்சை மற்றும் பிரசவம் பார்க்கப்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, புண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஊசிகள், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், சத்துஊசி உள்ளிட்ட ஊசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகின்றன.
ஏராளமான கிராமங்களை கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே மக்கள் வருகின்றனர். இங்கு சென்று சரியாகவில்லையெனில் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் சாதாரண காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருவதால் சலி, காய்ச்சல் உள்ளிட்டவைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கான ஊசி இல்லையென நோயாளிகளுக்கு ஊசி போடாமல் மாத்திரைகளை மட்டும் வழங்கி திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அநோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கிராமங்களில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் வந்தால் ஊசி இல்லை, மீண்டும் சில நாட்கள் கழித்து வாருங்கள் என கூறுகின்றனர். இதனால் மேலும் அலைச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கான ஊசி இல்லை என கூறுவதெல்லாம் தற்போது தான் நடக்கிறது. தேவையான ஊசி, மாத்திரைகள் இருப்பு வைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை முன்புபோல் சரிவர செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.