×

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள் 50% கட்டண சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் தீபாவளியை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள் 50% கட்டண சலுகை வழங்கப்படும் என்று  மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபாவளி அன்றும் தீபாவளி மறுநாளும்  50% கட்டண சலுகை வழங்கப்படும். வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி வருவதால் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட சென்னைவாசிகள் பெரும்பாலானோர் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். முன்னதாக 26 ஆம் தேதி சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.

காரணம் இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதாவது விடுமுறை நாளில் வருவதால் தீபாவளிக்கென தனி விடுமுறை இல்லாமல் இருப்பது போன்ற தோற்றம் உருவானது. இந்த நிலையில் மேலும் ஒரு நாள் விடுமுறை இருந்தால் சிரமம் இல்லாமல் இருக்கும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். பின்னர் 28ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. அதன் படி 26, 27, 28 இந்த மூன்று நாட்களும் தீபாவளிக்கான விடுமுறை நாட்களாக உள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்களுக்கு 50 % கட்டண சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அன்றைய தினத்தில் ஃபன் மால், கடற்கரை, சினிமா உள்ளிட்ட விஷயங்களுக்கு வெளியே செல்வதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ள கட்டண சலுகை பயன்படலாம். எனினும், இந்த சலுகை ட்ரிப் பாஸ் உள்ளவர்கள் மற்றும் எண்ணற்ற பயண சலுகை அட்டை கொண்டவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Metro Rail Administration , Chennai, Deepavali, Fare Concessions, Metro Rail Administration
× RELATED கடந்த மாதத்தில் 86,15,008 பேர் மெட்ரோ ரயிலில் பயணம்