×

2000 டயர்களில் டெங்கு கொசு உற்பத்தி மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு நோட்டீஸ்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

வேலூர்: 2000 டயர்களில் டெங்கு கொசு உற்பத்தி செய்ததாக அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்துக்கு நோட்டீஸ் வழங்கி மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் காய்ச்சலால் பலியாகி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இன்றுவரை 6 பேர் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தடுக்க முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்கும் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ரங்காபுரம் பகுதியில் இன்று ஆய்வு நடத்தினர். அப்போது அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 2000 பஸ் டயர்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் உடனடியாக அவற்றை சுத்தம் செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சுகாதார அலுவலர் சிவகுமார் கூறுகையில், ‘மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு நோட்டீஸ் வழங்கியது குறித்து கலெக்டருக்கு தகவல் அளிக்கப்படும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். இதேபோல் தோட்டப்பாளையம் பகுதியில் நடந்த ஆய்வின்போது டெங்கு கொசு உற்பத்தி செய்யப்பட்டிருந்த லாட்ஜுக்கு ரூ5000 அபராதம் விதிக்கப்பட்டது. வள்ளலார் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த ஆய்வில் சுமார் 5 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ7,800 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் காட்பாடியில் சுகாதாரப்பணிகள் கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம் மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன், 1வது உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாரதிநகர் 2வது மெயின்ரோட்டில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். அங்குள்ள வணிக வளாகத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியானது தெரியவந்தது. இதையடுத்து அந்த வணிக வளாகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், ‘டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணி தொடர்ந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் தனிக்குழுக்கள் சென்று டெங்கு கொசுக்களை அழித்து வருகின்றனர். தற்போது காட்பாடியில் நடத்திய ஆய்வில் ரூ10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம். இதேபோல் பல காலிமனைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அங்கும் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. எனவே அந்த இடம் யாருக்கு சொந்தமானது என பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவரிடம் அபராதம் வசூலிக்கப்படும். ஒருவேளை அந்த காலியிடத்திற்கு வரி செலுத்தாதது தெரியவந்தாலும், அதற்கும் சேர்த்து அபராதத்துடன் வரி வசூலிக்கப்படும். இதுதவிர அந்த இடத்தை தூய்மைபடுத்துவதற்கான செலவையும் இரட்டிப்பாக வசூலிக்கப்படும்’ இவ்வாறு கூறினார்.

Tags : Dengue Mosquito Zone Transport Office: Corporation Authorities Action ,Dengue Mosquito Zone Transport Unit , Dengue Mosquito, Manufacturing, Zonal Transport Office, Notices, Corporation Officers
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...