×

நாகர்கோவிலில் போலீஸ் பற்றாக்குறையால் திணறல்: தீபாவளி நெருக்கடியை சமாளிக்குமா காவல்துறை?

நாகர்கோவில்: நாகர்கோவிலில் போதிய போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, கேப் ரோடு, பாலமோர், கே.பி. ரோடு, கோர்ட் ரோடு, ெவட்டூர்ணிமடம், செட்டிக்குளம், பொதுப்பணித்துறை அலுவலக சாலை உள்பட மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகை கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே சாலைகள் மோசமாக இருக்கும் நிலையில் மழையும் பெய்து வருவதால், நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்காக குமரியில் இருந்து போலீசார் சென்றுள்ளனர். அங்கு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின், நாளை (25ம் தேதி) போலீசார் குமரி மாவட்டம் வருகிறார்கள். இடையில் ஒரு நாள் அவர்களுக்கு நிச்சயம் ஓய்வளிக்க வேண்டும். ஆனால் 27ம்தேதி தீபாவளி பண்டிகை ஆகும். 26, 27, 28ம்தேதி என 3 நாட்கள் ெதாடர் விடுமுறை வருகிறது. எனவே விடுமுறை தினங்களில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், சுற்றுலா தலங்களில் கண்காணிப்பு , கடலோர பகுதிகளில் பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்ெகாள்ள வேண்டி இருக்கிறது. ஓய்வளிக்காமல் போலீசாரை பணியில் ஈடுபடுத்துவது கடும் சிரமம் ஆகும். எனவே நிலைமையை எப்படி சமாளிக்க என்பது பற்றி போலீஸ் அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆலோசனை நடத்தி வருகிறார். ஊர்க்காவல் படையினரை முக்கிய சந்திப்புகளில் நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நேற்று காலை கடுமையான வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோட்டார் சவேரியார் கோயில் சந்திப்பில் இருந்து கோட்டார் காவல் நிலையம் வரை ஒரு வழிப்பாதை உள்ளது.
இதில் பைக்கில் வருபவர்கள் ஒரு வழிப்பாதையில் அத்துமீறி வருவது வாடிக்கையாக உள்ளது. போலீசார் பேரிகார்டு வைத்திருந்தாலும் பைக்கில் வருபவர்கள் அதை கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் போலீசார் இல்லாததால் ஆட்டோ, கார்களும் அத்துமீறி வருகின்றன. இதுவும் நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது. எனவே தீபாவளி பண்டிகை முடியும் வரை ஒரு வழிப்பாதையை முறையாக அமுல்படுத்தும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் கூறி உள்ளனர்.

Tags : Nagercoil ,crisis ,Diwali , In Nagercoil, police shortages, Diwali and crisis
× RELATED கந்து வட்டி, இருசக்‍கர வாகன மோசடி...