×

தங்களிடம் இருந்து தொடர்ந்து பாமாயில் வாங்குமாறு இந்தியாவை மலேசியா பிரதமர் வலியுறுத்தல்

மலேசியா: தங்களிடம் இருந்து தொடர்ந்து பாமாயில் வாங்குமாறு இந்தியாவை மலேசியா பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா.பொதுச் சபையில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மலேசிய பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மலேசியா, துருக்கி அரசுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அண்மையில் அறிவுறுத்தியது. இந்நிலையில் மலேசிய பாமாயில் மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு உயர்த்த இருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், கடந்த சில தினங்களாக மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்யும் அளவை இந்திய வர்த்தகர்கள் திடீரென குறைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

முன்னதாக இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹமத், இரு நாடுகளுக்கும் இடையே நடப்பது ஒரு வழி வர்த்தகம் அல்ல என்று சுட்டிக்காட்டி இருந்தார். மேலும், இரு தரப்புக்கும் இடையேயான உறவு மற்றும் வர்த்தகம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த எண்ணெய் வர்த்தக அமைப்பு ஒன்று, மலேசியாவிடம் இருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மலேசிய வர்த்தக அமைச்சர் டேரல் லீக்கிங், தங்களிடம் இருந்து தொடர்ந்து பாமாயில் வாங்கும்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.


Tags : Malaysia ,India , continue buy palm oil, India, Malaysia Prime Minister, insist
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…