உ.பி.யில் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் தீர்ப்பை திசைதிருப்பும் பாஜக: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் வருவதை குறைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு பாஜக அழுத்தம் கொடுத்து மக்கள் தீர்ப்பை திசை திருப்ப முயல்வதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இன்று சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இதில் பெரும்பாலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. உத்தரபிரதேசத்தின் கங்கோ சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை வகித்து வந்ததாகவும் அவரது முன்னிலையை பின்னடைவாக மாற்றும்படி பாஜக அழுத்தம் மாவட்ட ஆட்சியருக்கு தருவதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது: கங்கோவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மிகுந்த ஆணவத்தோடு மக்களின் தீர்ப்பை பாஜக மாற்ற முயற்சிக்கிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு பாஜக அமைச்சர் மீண்டும் மீண்டும் கிட்டத்தட்ட 5 முறை மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் அழைத்து காங்கிரஸ் வேட்பாளரின் முன்னிலையை குறைக்க வலியுறுத்தினார் என்பது ஜனநாயகத்திற்கே அவமானம் ஆகும். உத்தரபிரதேச காங்கிரஸ் இதை கடுமையாக எதிர்த்துப் போராடும். இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் முழுமையான பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என பிரியங்கா தனது ட்வீட் செய்துள்ளார்.

Related Stories:

>