×

காங்கிரஸ் தொகுதியை கைப்பற்றிய அதிமுக: நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி  உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23  பேர் களத்தில் உள்ளனர்.  விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம்  வாக்குகளும் பதிவாகின. தேர்தலில், பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி  தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

இதற்கிடையே, விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் சுமார் 1,13,428 வாக்குகள் பெற்றநிலையில், திமுக வேட்பாளர்  புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்றிருந்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்நிலையில், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94,562 பெற்றநிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 62,229 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி தொகுதிகள் காங்கிரஸ் மற்றும் திமுகவிடமிருந்து அதிமுக வசம் வந்துள்ளது. நாங்குநேரி மற்றும்  விக்கரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியின் முலம் சட்டபேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரம்:

விக்கிரவாண்டி தொகுதி: அதிமுக வெற்றி

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்: 1,13,428 வாக்குகள் (44,782 வாக்குகள் வித்தியாசம்)
திமுக வேட்பாளர் நா.புகழேந்தி: 68,646 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி: 2,826 வாக்குகள்

நாங்குநேரி தொகுதி: அதிமுக வெற்றி

அதிமுக வேட்பாளர் நாராயணன்: 94,562 வாக்குகள் ( 32,333 வாக்குகள் வித்தியாசம்)
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்: 62,229 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன்: 2,662 வாக்குகள்

Tags : AIADMK ,Narayanan ,Congress ,elections ,Nanguneri , AIADMK conquers Congress seat: Narayanan wins by 32,333 votes in Nanguneri elections
× RELATED பரமக்குடி, உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி