×

வங்கதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு தூக்குதண்டனை: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு

வங்கதேசம்: வங்கதேசத்தில் பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்ததற்காக 19 வயது பெண் மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு நாட்டையே உலுக்கியது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசத்தின் பள்ளிக்கூடம் ஒன்றில் பள்ளி மாணவி நுஸ்ரத் ஜஹான் ரஃபி என்பவர் தலைமை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த ரஃபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வகுப்பறையிலிருந்து மாணவியை கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்ற சிலர் அவரை பாலியர் புகாரை வாபஸ் வாங்கும்படி அழுத்தம் கொடுத்தனர்.

புகாரை வாபஸ் பெறமுடியாது என்று மாணவி மறுத்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியரின் உத்தரவின்பேரில் மாணவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் ரஃபி சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் 10 தேதி உயிரிழந்தார். இதற்கிடையே பாலியல் துன்புறுத்தல்களைப் புகாரளிக்க மார்ச் மாத இறுதியில் ரஃபி காவல்துறைக்குச் சென்று புகார் அளித்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. உள்ளூர் காவல் நிலையத் தலைவர் தனது புகாரைப் பதிவுசெய்கிறார். ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று மாணவியிடம் நீங்கள் போகலாம் என்று கூறி நிராகரித்தது வீடியோ காட்சிகளாக சமூக வலைதளங்களில் கசிந்தது.

இச்சம்பவம் வங்கதேசத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலையாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை  வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இப்போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருந்தார். இவ்வழக்கின் மீதான இறுதி விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

இதுகுறித்து விசாரணையை வழிநடத்திய மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் முகமது இக்பால் ஏ.எஃப்.பி கூறியதாவது: கைது செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் பள்ளியின் முதல்வர் ரஃபியின் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக உண்மையைக் கூறியுள்ளார். ரஃபி மீது வழக்கைத் திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுக்குமாறும் அவர் மறுத்ததால் அவரைக் கொன்றுவிடுமாறும் ஆசிரியர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ரஃபியின் வகுப்புத் தோழர்கள் ஆவர். தீக்குளிப்பதற்கு முன்பு அவர்கள் ரஃபியை தாவணியால் இறுகக் கட்டினர். இந்த சம்பவத்தை ஒரு தற்கொலை என்ற தோற்றத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டமாகும். ஆனால் தீப்பிடித்துக் கொண்டிருந்தபோது தாவணி எரிய தானாகவே ரஃபியின் கைகால்கள் விடுவிக்கப்ப்பட்டதால் அவர் கீழே இறங்க முடிந்தது என மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நெரிசலான நீதிமன்ற அறையில் தீர்ப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவிக்கு ஆதரவான வழக்கறிஞர் ஹபீஸ் அகமது கூறுகையில், இந்த தீர்ப்பு இனி வங்கதேசத்தில் யாரும் இத்தகைய கொலைவெறிச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளது. எங்களுக்கு சட்டத்தின் ஆட்சி உள்ளது என்றார். இந்த கொலை நம்மைச் சுற்றி தொடர்ந்து நடைபெற்றுவரும் பல்வேறு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது வழங்கப்படும் தண்டனையின் கலாச்சாரத்தை அம்பலப்படுத்தியதாகவும், தங்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் மீது புகாரளிப்பவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்திக்கிறார்கள் என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பெரும்பாலும் குற்றச்சாட்டு மீதான விசாரணைகள் அரிதானவையாக உள்ளது. கொலைக்குப் பிறகு வங்கதேசம் சுமார் 27,000 பள்ளிகளுக்கு பாலியல் வன்முறைகளைத் தடுக்க குழுக்களை அமைக்க உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். விசாரணை 62 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டதால் வழக்கு விரைவாகக் கண்டறியப்பட்டது.

Tags : Bangladeshi ,court ,student , Bangladesh: Sexual Harassment, Bangladesh, Sexual Harassment, Student, Burning, Case
× RELATED சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச்...