×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, சிதம்பரத்தை காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

தேவைப்பட்டால் கைது செய்துகூட விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடுத்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. முறைகேடு புகார் விவகாரத்தில் சிபிஐ தொடுத்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் அவரது சிறைவாசம் நீடித்து வருகிறது. இதே விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை அக்டோபர் 18-ல் சிதம்பரத்தை கைது செய்தது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் விசாரணையில் உள்ளார். இந்தநிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கேட்டு நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ப. சிதம்பரத்தின் ஜாமின் தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, அமலாக்கத் துறையின் விசாரணை முடிந்து இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tags : P.Chidambaram ,Enforcement Department ,Enforcement of Delhi High Court , P Chidambaram, Bail petition, High Court of Delhi, Enforcement Department, Case
× RELATED ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!