வந்தவாசி அருகே மாட்டை அடித்து கொன்றது சிறுத்தையா, காட்டுநாயா? வனத்துறையினர் ஆய்வு

வந்தவாசி: வந்தவாசி அருகே மாட்டை அடித்து கொன்றது சிறுத்தை? காட்டு நாயா? என வனத்துறையினர் ஆய்வு செய்தனர். வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர்(45). இவர் விளாங்காடு கிராமத்தில் உள்ள தனது கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் மாட்டை கட்டி வைத்து இருந்தார். இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் மாடு குடல் சரிந்தநிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டனர். அருகில் சென்று பார்த்த போது  சிறுத்தையின் கால் தடம்போல் இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த தாசில்தார் எஸ்.முரளி, கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அதிகாரிகள் வருவதற்குள் மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில், நேற்று ஆரணி வனவர் சுரேஷ் தலைமையில் வனகாப்பாளர்கள் மோகன், ராமமூர்த்தி, கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் உள்ளிட்ட 5 ேபர் நேற்று மாடு இறந்த இடத்திற்கு சென்று கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, கால் தடம் விளாங்காடு ஏரி உபரி நீர் செல்லும் வழி வரை இருந்தது தெரிந்தது. கால் தடத்தை வைத்து பார்த்த போது காட்டு நாயாக கூட இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த கால் தடம் குறித்து மாவட்ட நிர்வாக ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. ஆய்வுக்கு பின்னர் அது சிறுத்தையின் கால்தடமா, கழுதை புலியா, காட்டு நாயா என தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Vandavasi , Leopard
× RELATED காட்பாடி அருகே காளை விடும் விழா: மாடு முட்டி ஒருவர் பலி: 19 பேர் படுகாயம்