×

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கிருஷ்ணகிரி அணையின் மதகுகளில் நீர்க்கசிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை மதகுகளில் தொடர்ந்து நீர் கசிவு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கடந்த சில வாரங்களாக, கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்வரத்து 309 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 709 கன அடியாக அதிகரித்தது. மேலும், அணையின் மொத்த உயரமான 52 அடியில் 42.20 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் 616 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் உள்ள 8 மதகுகளில் பிரதான முதல் மதகு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்காலிக மதகு அமைக்கப்பட்டது. பின்னர், தற்காலிக மதகு அகற்றப்பட்டு, ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு அமைக்கப்பட்டது. இந்நிலையில் அணையில் 2வது மற்றும் 7வது மதகில் அதிகளவு தண்ணீர் கசிந்து வருகிறது. அணையில் உள்ள 2, 7 வது மதகுகளை மாற்றிமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், 2, 7வது மதகுகளில் உள்ள ரப்பர் சீல்கள் விரிவாகி நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. ரப்பர் சீலின் மூலம் நீர்கசிவு ஏற்படுவது வழக்கமானது தான். இதற்காக அச்சப்பட தேவையில்லை. அணையின் நீர்மட்டம் 42.20 அடியாக உள்ளது. அணையில் மதகுகள் மாற்றிமைக்க ஒப்பந்தம் விடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர். ஆனால், இதேபோல் தொடர்ந்து நீர் கசிவு ஏற்பட்டால் இந்த தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : dam ,Krishnagiri ,Krishnagiri Dam , The Krishnagiri Dam
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்