×

காரைக்காலில் 60 பேர் பாதிப்பு: வேகமாக பரவுகிறது டெங்கு

காரைக்கால்: காரைக்காலில் மாவட்ட நலவழித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் அலட்சியத்தால் டெங்கு வேகமாக பரவும் அபாயம் இருப்பதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பக்கத்து மாவட்டத்தை தொடர்ந்து, காரைக்காலில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த ஆண்டிலேயே இந்த மாதம் தான் காரைக்காலில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக நலவழித்துறை புள்ளிவிவரம் கூறுகிறது. முக்கியமாக சாலை, சாக்கடை, வடிகால் வாய்க்கால், குடியிருப்பு, காலிமனைகளில் தேங்கியுள்ள மழை நீரை, சாக்கடை கழிவுநீரை, கழிவுகளை, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, நலவழித்துறை, பொதுப்பணித்துறை போன்ற யாரும் முன்வரவில்லை என்றும், குறைந்தபட்சம், இது போன்ற இடங்களில் ஆய்வு செய்யவோ, கொசு மருந்து அடிக்கவோ, கழிவுகளை அகற்றவோ போதுமான ஆள் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதன் காரணமாக, தினசரி 25க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் ஏற்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  டெங்குவாக இருக்குமோ என்ற பயத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் டெங்குவால் ஏற்பட்டு வரும் உயிர்பலி, ஒரு சில இடங்களில் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் உள்ளோர், அரசு ஊழியர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வாங்கி போட்டுள்ள காலிமனைகள் ஏராளம். டெங்கு கொசு இது போல் தேங்கும் நீரிலும், பழைய பொருட்களில் தேங்கும் நல்ல நீரிலும் தான் வேகமாக உற்பத்தியாகிறது. இவர்களுக்கு பல எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் அறிவித்தாலும் அனைத்தும் கண்டும் காணாமலேயே உள்ளது. கலெக்டர் விக்ராந்த்ராஜா, காரைக்காலில் டெங்கு பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த மாதமே மாவட்ட நலவழித்துறை மற்றும் அரசுத்துறைக்கு உத்தரவிட்டதால், நலவழித்துறை உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே பாதியளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதலாக நலவழித்துறை மட்டும் தினமும் வீடு, வீடாக சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், அவர்களிடம் போதுமான ஊழியர்கள் இல்லை என்பதால், அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில்  டெங்குவை ஒழிக்கும் புகை மருந்து அடிக்கவோ, டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் லார்வா புழுவை ஒழிக்கவோ முடியவில்லை என்பது தான் உண்மை.

எனவே, மாவட்டம் முழுவதும், நலவழித்துறையுடன், பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் இணைந்து, டெங்குவை விரட்டும் மருந்து, புகை மருந்தை அடிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் டெங்கு கொசுவை காரைக்காலை விட்டு முழுமையாக விரட்ட முடியும். நாங்களும் டெங்குவுக்கு எதிராக வேலை செய்கிறோம் என இங்கும், அங்குமாக அலட்சியப் போக்குடன் செயல்பட்டால், இங்கு விரட்டப்படும் கொசு அங்கேயும், அங்கே விரட்டும் கொசு இங்கேயும் சுற்றிச்சுற்றி பொதுமக்களை இம்சை செய்யுமே தவிர ஒழியாது. மேலும் பல சமூக அமைப்புகள் இலவசமாக வழங்கும் நிலவேம்பு கசாயம், பப்பாளிச்சாறு போன்றவற்றை அனைவரும் தாராளமாக பருகலாம். டெங்கு சந்தேகம் வந்தால் உடனே அருகில் உள்ள  அரசு மருத்துமனையை அணுகலாம். இது டெங்கு வராமல் தடுக்கும்.

இது குறித்து, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் கூறியது: மாவட்டம் முழுவதும் டெங்கு பரவாமல் இருக்க, கலெக்டர் உத்தரவின் பேரில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். மாவட்டம் முழுவதும் இதற்காக தனியாக 18 ஊழியர்கள் வீடு, வீடாக சென்று, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், லார்வா எனும் புழுக்களை கண்டறிந்து அழித்து வருகிறோம். இந்த புழுக்கள் மேலும் உற்பத்தியாகாமல் இருக்க பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலர் புகை மருந்து அடிப்பதில்லை என கூறுவது தவறு.

கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில், பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் இடங்களில், எங்கள் ஊழியர்கள் குறிப்பிடும் இடங்களில் தினசரி புகை மருந்து அடித்து வருகிறோம். புகை மருந்து அந்த நேரத்தில் சுற்றும் கொசுக்களை மட்டுமே அழிக்கும். நிரந்தர தீர்வு என்றால், அந்த கொசுவை உற்பத்தி செய்யும் லார்வா எனும் புழுவை அழிப்பதுதான் நிரந்தர தீர்வு. அதில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். இந்த லார்வா உற்பத்தியாகும் முறை, அழிக்கும் முறை குறித்து துண்டு பிரசுரம் மூலமும் ஊழியர்கள் மூலம் விளக்கி வருகிறோம்.

காரைக்காலில் நடப்பு மாதம் 60 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் 35 பேர் தமிழக பகுதியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும், 60 பேருக்கும் உரிய சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறோம். நாள் ஒன்றுக்கு 4 பேர் வீதம் இந்த அறிகுறியுடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சீரியசான கேஸ் மற்றும் உயிரிழப்பு ஒன்றும் இல்லை. பொதுமக்கள் இந்த இடத்தில் கொசு, லார்வா அதிகம் உள்ளது என குறிப்பிட்டு சொன்னால், அங்கு தேவையான நடவடிக்கையை கண்டிப்பாக எடுப்போம்.

எனவே டெங்கு பற்றிய பயம் யாருக்கும் வேண்டாம். இருந்தாலும், காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் வாந்தி, உடல் சோர்வு இருந்தால் அது டெங்குவாக இருக்கலாம். காய்ச்சல் ஏற்பட்டால், சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மழையின்போது அதிகம் பரவும் ஈக்கள் மூலம் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே எப்பொழுதும் தண்ணீரை முழுமையாக காய்ச்சிக் குடிக்க வேண்டும். சாப்பிட செல்லும்போதும், கழிவறை  சென்றுவிட்டு வரும்போதும் கையை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். டெங்குவை விரட்ட மாவட்ட நலவழித்துறையுடன் கைகோர்த்தால், நிச்சயம் டெங்கு இல்லா மாவட்டமாக காரைக்கால் மாறும் என்றார்.

ஏடிஎஸ் கொசு பலரை பலமுறை கடிக்கும்

காரைக்கால் மாவட்ட நலவழித்துறையின் கொசு மற்றும் பூச்சியியல் நோய்தடுப்பு தொழில் நுட்ப உதவியாளர் சேகர் கூறும்போது, மழைக்காலம் தொடங்கி இருப்பதால், நலவழித்துறை ஊழியர்கள் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நேரில் சென்று டெங்கு கொசுக்களை அழித்து வருகின்றோம். டெங்கு நோயை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் பகலில் பலரை பலமுறை கடிக்கும். இது கருப்பு நிறத்தில், சிறகுகள், கால்களில் வெள்ளைநிற புள்ளிகளுடன் இருக்கும். டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். குறிப்பாக, குடியிருப்புகள், காலிமனைகள் சுற்றியுள்ள பகுதிகளில், நீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும்  தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். தேவையற்ற பாத்திரங்கள் மற்றும் பொருட்களை கவிழ்த்து வைக்க வேண்டும். முடிந்தால் அப்புறப்படுத்த  வேண்டும் என்றார்.

Tags : Karaikal , Dengue
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...