×

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி நகரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்: ஆந்திர அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை

திருமலை: தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி நகரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என நேற்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஆந்திர அரசுக்கு கோரிக்கையாக எழுதிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டன.

இதில் அறங்காவலர் குழு எடுத்த தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் சுப்பாரெட்டி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரம்மோற்சவ விழாவினை சிறப்பாக செய்து முடித்த தேவஸ்தான நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரமும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.6,850-ம் போனசாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் முழுவதுமாக தடை செய்யப்படும். திருமலை, திருப்பதி ஆகிய இரு நகரங்களும் பவித்ர திருத்தல நகரங்களாக விளங்கி வருகின்றன. ஆதலால் திருப்பதி நகரில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பபடும். அதன் பின்னர் அரசு இது குறித்து முடிவெடுக்கும் என நம்புகிறேன்.

திருப்பதியில் கட்டப்பட்டு வரும் கருடா மேம்பாலம் சில மாற்றங்களுடன் மறு டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும். தேவஸ்தான எல்லைக்குள் பணியாற்றும் 162 தற்காலிக வனத்துறை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். கூட்டத்தில் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Thirupathi City ,Thirupathi Devasthanam ,Government of Andhra Pradesh ,Thirupatti Tirupati City , Tens of thousands of devotees, Tirupati
× RELATED சென்னையில் பத்மாவதி கோயில்கட்ட...