×

இலங்கை குண்டுவெடிப்பு: இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது... இலங்கை நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை தாக்கல்

கொழும்பு: இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிலைக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். கிறித்துவ தேவாலயங்கள் மூன்று ஹோட்டல்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தீவிரவாதத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 40 பேர் வெளிநாட்டவர், 45 குழந்தைகளும் இத்தாக்குதலில் உயிரிழந்தனர்.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான ஜக்ரான் ஹசிம், கொழும்பு ஓட்டலில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. தாக்குதல் குறித்து இலங்கை நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 272 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் இந்தியர்கள் பெருமளவில் தங்கியிருந்த ஒரு ஹோட்டலின் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகமும் இந்தியர்கள் தங்குமிடமும் தாக்குதலுக்கான முக்கிய இலக்குகளாக இருந்ததாகவும், ஏப்ரல் 9ம் தேதியே இந்த தாக்குதல் குறித்த எச்சரிக்கையை உளவுத்துறையினர் ஐஜிபிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை உளவுத்துறை இயக்குனருக்கு ஏப்ரல் 4ம் தேதியே தகவல் கிடைத்தபோதும் அவர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sri Lankan ,Indian Embassy ,Sri Lanka Parliamentary Standing Committee , Sri Lanka Blast, Indian Embassy, Standing Committee
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை