×

ஹாங்காங் போராட்டத்தில் சந்தேகிக்கப்படும் வகையில் கைது செய்யப்பட்டவர் விடுதலை: சட்ட திருத்த மசோதா முறைப்படி வாபஸ்

ஹாங்காங்: ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்ததும், அதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த மசோதா கைவிடப்பட்டதும் அனைவரும் அறிந்ததது ஆகும். ஆனால் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தைவானுக்கு நாடு கடத்த வழிவகை செய்வதற்கு சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய காரணமாக இருந்தவர் சான் டோங் காய் ஆவார். ஹாங்காங்கை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தைவானில் கர்ப்பிணி காதலியை கொலை செய்துவிட்டு ஹாங்காங்குக்கு தப்பி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் காதலியின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்ததாக பணமோசடி வழக்கும் தொடரப்பட்டது.

இதில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சான் டோங் காய் மீதான கொலை வழக்குக்காக அவரை தைவானுக்கு நாடு கடத்துவதற்காகவே கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுதான் அங்கு மாபெரும் போராட்டத்துக்கு வித்திட்டது. இந்த நிலையில், சான் டோங் காயை ஹாங்காங் கோர்ட்டு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. சிறையில் இருந்து வெளியே வந்த சான் டோங் காய், பாதிக்கப்பட்ட தனது காதலியின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதோடு, தன் மீதான குற்றச்சாட்டை தைவானில் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது அவர் தாமாகவே தைவானுக்கு சென்று போலீசில் சரணடைவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நேற்று முறைப்படி வாபஸ் பெறப்பட்டது. இதனை ஜனநாயக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர். இந்த நிலையில் ஹாங்காங்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அதன் நிர்வாக தலைவர் கேரி லாமை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறுநபரை பணியமர்த்த மத்திய அரசான சீனா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இது குறித்து சீனா தரப்பிலோ அல்லது ஹாங்காங் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.


Tags : protest ,Hong Kong ,protesters , Suspected,detention, Hong Kong,protesters,released
× RELATED ஹாங்காங்கில் செப்டம்பரில் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு