×

‘கற்றுயர நம் அண்ணா, கனிவுடன் அழைக்கிறார்!’: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உயர்நீதிமன்றம் உத்தரவுக்குப்பின், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்படுவதற்கான அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. “இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே” என்பது போன்ற உணர்வுடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உடனடியாகப் புறப்பட்டேன். அடடா, எத்தனை பிரம்மாண்டமான அறிவுத் திருக்கோவில் அது! நூலகத்தின் வாசலில் ‘அண்ணா’ படித்துக் கொண்டிருந்தார். “நீயும் படிக்க வா தம்பீ!” என்று அவருக்கே  உரிய காந்தக் குரலில் அழைப்பது போல, அது இருந்தது. 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார். அதனைத் தடுத்திட முனைந்தார் தலைவர் கலைஞர். மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களிடம், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க தலைவர் கலைஞர் அவர்கள் உத்தரவிட்ட நிலையில், ஆசிரியை மனோன்மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதன் காரணமாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்க நினைத்த ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத எண்ணத்திற்குத் உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு தடை விதித்தது.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்ந்த நிலையில், ஆசிரியை மனோன்மணி மீண்டும் மீண்டும் மனுச் செய்ததன் விளைவாக, “நூலகத்தைப் பராமரிக்க வேண்டும் எனவும், உறுப்பினர் சேர்க்கை நடைபெறவேண்டும்” எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனையடுத்து, உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நீண்ட நெடிய இந்தச் சட்டப்போராட்டத்தில் கிடைத்த வெற்றியின் மகிழ்வுடன், புகழ்மிக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. நூலகத்தின் முதல் உறுப்பினர், தலைவர் கலைஞர் அவர்கள். அவர் பதிவு செய்து கொண்ட பிறகு, பணிகள் முழுமையுற்ற நிலையில், ஆட்சி மாறிய காரணத்தால், வேறு எவரையும் உறுப்பினராகச் சேர்க்க ஜெயலலிதா அரசு அனுமதிக்கவில்லை.

தற்போது நீதி கிடைத்த நிலையில், தலைவர் கலைஞர் அவர்களைத் தொடர்ந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாவது உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளும் பெருமைமிகு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடன் வந்தவர்களும்  தங்களையும் நூலக உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டனர். 9 ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெற்றிருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.தனது அன்புத் தம்பி அமைத்த நூலகத்தில் உறுப்பினராகச் சேருமாறு பேரறிஞர் அண்ணா நம்மை அழைக்கிறார்! தி.மு.கழக மாணவரணியினர், குறிப்பாக சென்னையில் இருப்போர், உடனடியாக நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்வதுடன், அனைத்து மாணவர்களும் உறுப்பினராவதற்கான இயக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறேன்.

Tags : MK Stalin ,DMK , DM, calls, DMK leader, Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...