×

தமிழகத்தில் சிசிடிவி மூலம் காவல் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும்: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக  முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி திரிபாதி, சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட், ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி பேசியதாவது: மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள காவல் துறையினருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்பு பணி பதக்கங்கள் 604 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இம்மாதம் 11 மற்றும் 12 தேதிகளில், பாரதப் பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. சென்னை வந்த சீன அதிபர் இரு நாட்களும் சென்னையிலிருந்து மாமல்லபுரம் சென்று திரும்பினார். ஒரு மிகப் பெரிய தலைவர்  இவ்வளவு நீண்ட தூரத்தை சாலை வழியாகச் செல்வதற்கு பாதுகாப்பு வழங்குவது ஒரு சவாலான விஷயமாகும். அதை நமது காவல்துறை தங்களுக்கே இயல்பாக உள்ள அனுபவத்தாலும், செயல்திறனாலும் சிறப்பாகச் செய்து வெற்றி கண்டுள்ளனர்.  சென்னை மாநகரத்தில் மட்டும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 789 கண்காணிப்பு கேமராக்களும் மற்றும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில்  1 லட்சத்து 79 ஆயிரத்து 949 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் நடைபெறுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தினை  தொடர்ந்து செயல்படுத்தி, தமிழ்நாட்டில் காவல் கண்காணிப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று நான் காவல் துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். ஒரு கோடி பக்தர்கள் காஞ்சி நகருக்கு வருகை புரிந்து அத்திவரதரை தரிசித்துச் சென்றனர். 48 நாட்கள் இரவு-பகல், வெயில்-மழை என்று பாராமல், பக்தர்களை கனிவாகவும், பரிவோடும் அணுகி, பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசித்துச் செல்ல, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிய காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்கள் அனைவரையும் நான் பாராட்டுகின்றேன்.

நடப்பு ஆண்டில் காவல் துறை கண்காணிப்பாளர்கள் முதல் காவல் துறை இயக்குநர் வரை உள்ள பதவிகளுக்கு 218 உயர் அதிகாரிகளுக்கும், முதல் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை உள்ள 5,979 காவல் ஆளிநர்களுக்கும், 305 அமைச்சுப் பணியாளர்களுக்கும் பதவி உயர்வு உரிய நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8,427 இரண்டாம் நிலை காவலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, சீருடைப் பணியாளர்களின் தியாகத்தையும், கடமை உணர்வையும் பாராட்டி, கவுரவிக்கும் வகையில் இப்பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் பேசினார்.



Tags : Tamil Nadu ,CCTV , Tamil Nadu, CCTV, top police officers, Chief Edappadi
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...