×

செம்பியம் மணலி பெருமாள் கோயில் தெருவில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்: கால்வாய் அமைக்க கோரிக்கை

புழல்: சோழவரம் ஒன்றியம் விச்சூர் ஊராட்சிக்குட்பட்ட செம்பியம் மணலி பெருமாள் கோயில் தெருவில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கி தெரு முழுவதும் குளம்போல் காட்சியளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழை இன்னும் அதிகமானால் தண்ணீர் கடல் போல் காட்சியளிக்கும். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்கள் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தெருவில் நடந்து செல்லக்கூட முடியாமல் இப்பகுதி மக்கள் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பெருமாள் கோயில் தெருவில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தற்போது சேர்ந்து உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை உடனடியாக அகற்றிட விச்சூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “தமிழகத்தில் பல பகுதிகளில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கள் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி குளம்போல் உள்ளது. இந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க சுகாதாரத்துறையினர் உடனுக்குடன் கொசு மருந்துகளை தெளித்து பல்வேறு நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்” என்றனர்.



Tags : Build Canal. Sempiyam ,Build Canal , Sembium Manali Perumal Temple, Sewerage and Canal
× RELATED செம்பியம் மணலி பெருமாள் கோயில்...