×

ஆவடியில் கொசு உற்பத்திக்கு வழிவகுத்த ஓட்டல், தியேட்டருக்கு 7.65 லட்சம் அபராதம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், கோயில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி, முத்தபுதுபேட்டை ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி சுகாதார மையம் மற்றும் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் தனியார் மற்றும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதற்கிடையில், திருமுல்லைவாயல், நேதாஜி நகரை சேர்ந்த பள்ளி மாணவி புவனேஸ்வரி (10) என்பவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இந்நிலையில் நேற்று மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் வைத்தியலிங்கம், சுகாதார அதிகாரி மோகன், சுகாதார ஆய்வாளர்கள் ஜாபர், ஜி.பிரகாஷ், ரவிச்சந்திரன், நாகராஜ், பிரகாஷ் ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகியிருந்த திருமுல்லைவாயல், சிடிஎச் சாலையிலுள்ள இரும்பு குடோனுக்கு 2 லட்சம், ஆவடி சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனுக்கு 1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும்,  ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு 1.5 லட்சம், அதே பகுதியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு 25 ஆயிரம், ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 3 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 20 ஆயிரம், காமராஜர் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு 20 ஆயிரம், அதே பகுதியில் உள்ள தியேட்டருக்கு 50 ஆயிரம், பட்டாபிராம், தண்டுரையில் உள்ள 4 குடியிருப்புகளுக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு, டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்த இடங்களில் 7.65 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டது.


Tags : mosquito breeding hotel ,corporation officials ,Theater ,Hotel , Avadi, mosquito production, hotel, theater, fines, corporation officials
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...