×

தள்ளுவண்டி கடையை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு

சென்னை: சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடையை அடித்து உடைத்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை பெரியமேடு காவல் எல்லைக்குட்பட்ட சாமி தெருவில் அப்துல் ரகுமான் என்பவர் தள்ளுவண்டி கடை நடத்தி வந்தார். இந்த கடையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி இரவு 11 மணி அளவில் பெரியமேடு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவராஜன் சக போலீசார் உதவியுடன் உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்தார். இந்த சம்பவத்திற்கான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைதொடர்ந்து தள்ளுவண்டி கடை உரிமையாளர் அப்துல் ரகுமான் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிசிடிவி பதிவு மூலம் புகாரளித்தார். ஆனால் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்ரோஸ் அகமது என்பவர் சிசிடிவி பதிவு அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுவண்டி கடையை அடித்து உடைத்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம், தனியார் சொத்தை சேதப்படுத்தியது குற்றம் என்று கூறி சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து பெரியமேடு போலீசார் தள்ளுவண்டியை உடைத்த, அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சிவராஜன் மீது தனியார் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர். தற்போது இன்ஸ்பெக்டர் சிவராஜன் குரோம்பேட்டையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Inspector ,trolley shop , Case record ,Inspector
× RELATED கோயம்பேட்டில் கஞ்சாவுடன் வாலிபர் கைது