×

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி 42% உயரும்

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 42 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவை இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றம் செய்கின்றன. ஈரானில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. ரூபாயில் வாங்குவதால் டாலர் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் விலையை பாதிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் தடை காரணமாக ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டது. நாட்டின் மொத்ததேவையில், ஒபெக் கூட்டமைப்பில் அங்கம் வகி்க்கும் மேற்காசிய நாடுகளில் இருந்து 65 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால், இந்த நாடுகளில் ஏற்படும் பதற்றமான, ஸ்திரமற்ற நிலைகளால் கச்சா எண்ணெய் விலை மற்றும் கொள்முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  இதை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இருந்து 42 சதவீதம் கூடுதலாக, 1,000 கோடி டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் திரவ இயற்கை எரிவாயுவும் இறக்குமதி செய்யப்பட உள்ளது. கடந்த நிதியாண்டில் 720 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் மற்றும் திரவ எரிவாயு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இது 1,000 கோடி டாலராக இருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


Tags : US , US crude oil ,imports rise 42%
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!