×

ஐசிசி டெஸ்ட் தரவரிசை டாப் 10ல் ரோகித் ஷர்மா

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 12 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலமாக மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையிலும் டாப் 10ல் இடம் பிடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்ட ரோகித் ஷர்மா, அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி ஒரு இரட்டை சதம் மற்றும் 2 சதங்கள் உட்பட மொத்தம் 529 ரன் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த சிறப்பான செயல்பாட்டால், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் அவர் ஒரேயடியாக 12 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்தார்.

கவுதம் கம்பீர், விராத் கோஹ்லி ஆகியோரை அடுத்து டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையிலும் டாப் 10ல் இடம் பிடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது. பேட்டிங் டாப் 10ல் விராத் கோஹ்லி தொடர்ந்து 2வது இடத்திலும், புஜாரா 4வது இடத்திலும் நீடிக்கும் நிலையில், அஜிங்க்யா ரகானே 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 4வது இடத்திலும், ஆர். அஷ்வின் 10வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் ஜடேஜா 2வது இடத்திலும், அஷ்வின் 6வது இடத்திலும்
உள்ளனர்.

Tags : Rohit Sharma , ICC Test ,Rankings, Rohit Sharma
× RELATED ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி