×

பிசிசிஐ நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவேன்... தலைவராக பொறுப்பேற்ற கங்குலி உற்சாகம்

மும்பை: இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியது போல் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் சிறப்பாக செயல்படுவேன் என்று புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (47) நேற்று பெறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி கூறியதாவது: ஒரு கேப்டனாக இந்திய அணியை எப்படி வழிநடத்தினேனோ, அதேபோல் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் சிறப்பாக செயல்படுவேன். நம்பகத்தன்மையில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன். பிசிசிஐயின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்வேன். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்.

கேப்டனாக  இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமானவர் விராத் கோஹலி.  இந்திய அணியை அவர் உலகின் மிகச்சிறந்த அணியாக உருவாக்க நினைக்கிறார். இதற்காக அவருக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றி தருவோம். முடிந்தவரை எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக இருப்பேன். அவருடன் நாளை (இன்று) பேச இருக்கிறேன். அதேபோல் டி20, டெஸ்ட் என ஒவ்வொரு வகையைான அணிக்கும் வேறு வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி இப்போது எழவில்லை. இந்தியா இப்போது வெற்றிகரமான அணியாக உள்ளது. உலகின் சிறந்த அணியாகவும் உள்ளது. டோனியின் சாதனைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தன. சாம்பியன் வீரர்கள் விரைவில் ஓய்வு பெற மாட்டார்கள். நான் பொறுப்பில் இருக்கும் வரை எல்லோரும் மதிக்கப்படுவார்கள். டோனியுடனும் பேசுவேன்.

பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர், கோஹ்லி, ரவி சாஸ்திரி ஆகியோருடன் முன்பு எப்படி நடந்து கொண்டேன் என்பது தேவையில்லாதது. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். உரியதை விவாதிப்போம். ரஞ்சி போட்டிகள்தான் முக்கிய வீரர்களை உருவாக்கி உள்ளது. எனவே ரஞ்சி போட்டிகளை மேலும் சிறப்பானதாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். டெஸ்ட் போட்டிகளை புதிய வடிவத்திற்கு கொண்டுச் செல்லும் கட்டாயத்தில் உள்ளோம். வாழ்க்கை எளிதானதல்ல. எல்லாமே  செயல்திறனை அடிப்படையாக கொண்டே முடிவு செய்யப்படுகிறது. அதுதான் கிரிக்கெட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கும். கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சிரமமில்லாமல் இருப்பதற்கான வழிவகைகளை செய்வதுதான் எங்கள்  இலக்கு.  நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது ஜக்மோகன் டால்மியா தலைவராக இருந்தார். நான் கேட்ட எதையும் அவர் மறுத்ததில்லை. முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், டால்மியா போன்று வீரர்களுக்கு ஆதரவாக இருப்பேன். இவ்வாறு கங்குலி கூறினார்.

Tags : BCCI ,Ganguly , Ganguly, Chairman, BCCI Administration
× RELATED கடந்த நான்கரை மாதங்களில் 22 முறை கொரோனா...