×

பணி வரன்முறை பட்டியல் தயாரிப்பில் குளறுபடி முதன்மை தலைமை பொறியாளரை தினக்கூலி ஊழியர்கள் முற்றுகை: 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் சேப்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: 10 ஆண்டுகள் முடித்த எங்களை அழைக்காமல் பட்டியல் தயாரித்தது எப்படி என்று முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களை முற்றுகையிட்டனர்.  தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்த தற்காலிக பணியாளர்கள் பட்டியலை மீண்டும் அனுப்பி வைக்குமாறு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு  உத்தரவிட்டார். அதன்பேரில் 4 ஆயிரம் பேரின் பட்டியலை கோட்ட செயற்பொறியாளர்கள் அனுப்பி வைத்தனர். அந்த பட்டியலை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்ததில் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் முடித்த 527 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம், முதல்வர் வீடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். சேலத்தில் மட்டும் 25 பேர் இதுபோன்று பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியல் ஆய்வு செய்யும் பணி முடிவடைந்த  நிலையில் தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில்  சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் பணியாற்றி வரும் 100க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் நீர்வளப்பிரிவு  முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், தாங்கள் பணி முடித்து 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு முதன்மை தலைமை பொறியாளர், தினக்கூலி பணியாளர்கள் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு விட்டது. ஏன் நேற்று வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இணை தலைமை பொறியாளர் (பொது) ராணியிடம் உங்களது கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அவர்கள் இணை தலைமை பொறியாளரை சந்தித்து மனுவை அளித்து விட்டு சென்றனர்.



Tags : Siege ,Chief Chief Engineer ,Chief Engineer ,Chepauk. , Trouble ,Task Scheduler, Chief Engineer, Chepauk
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...