×

முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என்பதை ராமதாஸ் நிரூபிப்பாரா?: மு.க.ஸ்டாலின் மீண்டும் சவால்

சென்னை: முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க ராமதாஸ் முன்வருவாரா என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  பொய்மையையே மூலதனமாக வைத்து, அரசியல் வியாபாரம் நடத்தி வரும் மருத்துவர் ராமதாஸ், திடீரென கற்பனையான ஒரு ஆராய்ச்சி நடத்தி, தற்போது ‘முரசொலி’ அலுவலகம் இருக்குமிடம் ‘பஞ்சமி’ நிலம் என ஒரு செய்தி  வெளியிட்டார். அது பஞ்சமி நிலமல்ல. பட்டா நிலம்” என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு, அது பஞ்சமி நிலமென்பதை மருத்துவர் ராமதாஸ் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு  விலகத் தயாரா என நான் அறைகூவல் விடுத்திருந்தேன்.
 ஆனால் ராமதாஸ் ‘மூலப் பத்திரத்தை வெளியிடவில்லை, பட்டாவை மட்டும் வெளியிட்டுள்ளனர்’ என்று அறிக்கை விட்டார். நான் விடுத்த அறைகூவலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வாய் மூடி மவுனமானார்.

 இப்போது, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜ கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனு தந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, அது செய்தியாக  ஊடகங்களில் வருகிறது. மருத்துவர் ராமதாஸ் கூற்றை நம்பி, மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன். அவருக்காக அனுதாபப்படுகிறேன்.  அவரின் கைப்பாவையாகி செயல்படத் தொடங்கியுள்ள சீனிவாசனுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். துளி கூட உண்மையில்லா, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து ஆதிதிராவிடர் தேசிய ஆணையத்துக்குச் சென்று,  நேரத்தை வீணடிப்பதைவிட அவர் இப்போது கூட்டணி வைத்துள்ள அதிமுகவின் முன்னாள் தலைவி ஜெயலலிதாவினால், சிறுதாவூர் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில்  மருத்துவர் ராமதாசுடன் இணைந்து செயல்பட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போதும் காலம் கடந்து விடவில்லை. மருத்துவர் ராமதாசுக்கு நான் ஏற்கனவே விடுத்த அறைகூவலை இப்போதும் வலியுறுத்துகிறேன். முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, அவர் முன் வருவாரா?. அவரது  கைப்பாவையாகச் செயல்படும் சீனிவாசன், ராமதாசை வலியுறுத்த முன்வருவாரா? இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Ramadoss ,Murasoli ,office space ,land ,MK Stalin ,Panchami ,Will Ramadas , Murasoli office, space,panchami land ,MK Stalin
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...