×

அரக்கோணத்தில் முன்பதிவு பெட்டியில் ஏறிய பெண்ணை பிளாட்பாரத்தில் தள்ளிவிட்ட பயணிகள்: ரயிலை நிறுத்தி தட்டிக்கேட்டதால் பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணத்தில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறிய பெண்ணை அதில் இருந்த பயணிகள் தள்ளிவிட்டதால் ரயிலை நிறுத்தி தட்டிக்கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வேலூர் மாவட்டம், அரக்கோணம், சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் சில்சார் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 9.20  மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர்,  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது பெண் பயணி ஒருவர், ரயில் புறப்படுவதை கண்டு அவசரத்தில் முன்பதிவு செய்த ஒரு பெட்டியில் ஏற முயன்றாராம். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகள் சிலர், இது முன்பதிவு பெட்டி எனக்கூறி அந்த பெண்ணை தடுத்து  தள்ளிவிட்டார்களாம். இதில் நிலைதடுமாறிய அந்த பெண், பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

இதைப்பார்த்த பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் ரயில் மீண்டும் நின்றது. சம்பவம் நடந்த ரயில் பெட்டியில்  சக பயணிகள் ஏறி அங்கிருந்தவர்களிடம், ‘இது தொடர்கதையாகிவிட்டது. உங்களைப்போல நாங்களும்  பயணிக்க வேண்டாமா? முன்பதிவு பெட்டி என தெரியாமல் ஏறியதில் என்ன குற்றம்? எதற்காக தள்ளி விட்டீர்கள்?’  என சரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன்பின், ரயில் 15 நிமிடம் தாமதமாக மீண்டும் புறப்பட்டு சென்றது.



Tags : Passenger ,Arakkonam ,platform. Board , Arakkonam Passenger ,woman , board ,reservation
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது