×

அன்னம் இட்ட வீட்டில் கன்னம் வைத்து 150 சவரன் நகை வாங்கிய ‘கில்லாடி’ பெண் கைது

* 25 லட்சம் திருடியது அம்பலம்
* சொத்து  விவரம் சேகரிப்பு

சென்னை: பிரபல தொழிலதிபர் வீட்டில் சிறுக சிறுக 25 லட்சத்துக்கு மேல் பணத்தை திருடி 150 சவரன் நகைகளை வாங்கி குவித்த வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை தரமணி ராணி அம்மன் தெருவை சேர்ந்தவர் உஷா (50). இவர் ஆர்.ஏ.புரம் 4வது தெருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பெரியண்ணன் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சில நாட்களாக உஷா வேலைக்கு வரும் போது ஒவ்வொரு நாளும் புதிய, புதிய நகைகளுடன் வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தொழிலதிபர் வீட்டில் உள்ள நபர்கள், சந்தேகத்தின்படி பீரோவில் உள்ள பணத்தை சரிபார்த்தனர். அப்போது அதில் 25 லட்சத்திற்கும் மேல் பணம் மாயமாகியிருந்தது. அதேநேரம் பல ஆண்டுகளாக உஷா வேலை செய்து வருவதால் இதுவரை வீட்டில் எத்தனை லட்சம் பணம் மாயமானது என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.  உடனே, தொழிலதிபர் வீட்டில் யாரேனும் பணம் எடுத்தீர்களா என்று விசாரித்துள்ளார். அப்போது யாரும் எடுக்கவில்லை என்று தெரியவந்தது. மேலும், இவ்வளவு பணம் வெளியில் இருந்தும் யாரும் வரவில்லை. வீட்டில் உள்ளவர்களும் எடுக்கவில்லை. ஆனால் பணம் மட்டும் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து வீட்டில் வேலை செய்து வரும் உஷாவிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். உடனே தொழிலதிபர் வீட்டில் மாயமான பணம் குறித்து வேலைக்கார பெண் உஷா மீது சந்தேகம் உள்ளது என்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து வேலைக்கார பெண் உஷாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அப்போது, உஷா தொழிலதிபர் வீட்டில் வேலை செய்யும்போது, யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்து சிறுக சிறுக பல நாட்களாக 25 லட்சத்திற்கும் மேல் திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய பணத்தை உஷா தனக்கும் தனது மகளுக்கும் தேவையான நகைகள் என 150 சவரன் நகைகளை வாங்கி குவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக வேலைக்கார பெண் உஷாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள நகைகள் குறித்தும், திருடிய பணத்தை வைத்து சொத்துக்கள் ஏதேனும் வாங்கி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery , Woman arrested, 150 shaving jewelery
× RELATED ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியில் அட்சய...