×

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் கடன் வாங்கி, அதைக்கொண்டுதான் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். கரும்பை அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பிய பின்னர், அதற்கான கொள்முதல் விலையை வசூலித்து தான், வங்கிகளில் வாங்கிய கடனை அடைப்பது வழக்கம். ஆனால், ஆரூரான் குழும ஆலைகள் வழங்க வேண்டிய 125 கோடி இன்னும் கிடைக்காததால், வங்கிகளில் தாங்கள் வாங்கிய பயிர்க்கடனை உழவர்களால் அடைக்க முடியவில்லை. அதனால், வங்கிகளில் புதிய கடனை வாங்கவும் முடியாமலும், கடன் கிடைக்காததால் அடுத்த பருவ கரும்பு சாகுபடி செய்ய முடியாமலும் உழவர்கள் தவித்து வருகின்றனர்.

திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைகளின் சொத்துகள் திவால் தீர்வு வல்லுனர்களால் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு உழவர்களின் நிலுவைத் தொகையை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வாகும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, திவால் தீர்வு மூலம் கிடைக்கும் நிதி முன்னுரிமை அடிப்படையில் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும்.அதற்கு முன் இடைக்கால ஏற்பாடாக பாதிக்கப்பட்ட உழவர்கள் அனைவரும் அடுத்த பருவ கரும்பு சாகுபடி செய்வதற்கு வசதியாக, அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் புதிய கடன் வழங்க தமிழக அரசு வகை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக தனி அதிகாரி ஒருவரையும் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramadas , farmers, sugar mills, Ramadas insists
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...