×

திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் உட்பட தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் : ஒப்புதல் அளித்து மத்திய அரசு கடிதம்

சென்னை: தமிழகம் முழுவதும் புதிதாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளித்து மத்திய அரசு, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஆண்டுக்கு 3,500 பேர் வரை படிக்கின்றனர். சென்னைதான், நாட்டின் சுகாதாரத் தலைநகரம் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவ வசதிகள் வளர்ந்துள்ளது. வட மாநிலங்களில் உள்ள பலரும் சிகிச்சைக்காக தமிழகம் வரும்நிலைதான் தற்போது உள்ளது. அதேநேரத்தில், ஊரக பகுதிகளில் போதுமான சுகாதார சேவை கிடைப்பதில்லை. இதனால் கூடுதல் எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறந்தால் மட்டுமே நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓரளவாவது, மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். இதனால் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், மக்கள்தொகைக்கு ஏற்ப நாட்டில் போதுமான டாக்டர்கள் இல்லாததால், மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் வரும்  2020-21ம் கல்வியாண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில், ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு, மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டிய மாவட்டங்கள் பட்டியல் மத்திய சுகாதாரத்துறைக்கு, தமிழக சுகாதாரத்துறை அனுப்பியிருந்தது. அதன்படி தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  
ஏற்கனவே இதுதொடர்பாக வாய்மொழியாக உத்தரவு அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, பொதுப்பணித்துறை செயலாளருக்கு கடந்த வாரம் 6 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமான பணிகள் தொடங்குவற்கான ஆயத்த பணிகள் தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதைத்தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் கண்காணிப்பு  பொறியாளர் பாண்டியராஜன் தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட  குழு, ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசுக்கு  நேற்று அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய  அரசின் உதவியுடன் தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள் புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் தலா 325 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். அதில் மத்திய அரசு 60 சதவீதம் நிதி வழங்கும். மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மத்திய அரசு 195 கோடி வழங்கும், மாநில அரசு 130 கோடி வழங்க வேண்டும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆவணத்தை நகல் எடுத்து ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனியே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதற்கான ஆவணம் தயாரிக்க வேண்டும். அந்த ஆவணங்களில் தமிழக அரசின் சார்பில் கையொப்பமிட்டு சீலிட்டு மத்திய சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மூலம் ஆரம்பத்தில் தலா 100 சீட்டுகள் வீதம் 600 சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மேலும் கூடுதல் சீட்டுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுவரை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்கு இருந்ததில்லை. முதல் முறையாக மத்திய அரசு கூடுதல் பங்கு வழங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழகத்துக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கும். அதன் பின்னர்தான் தமிழக மாணவர்களுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது தெரியவரும் என்று மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரதமருக்கு முதல்வர் நன்றி: தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க  அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : colleges ,Tirupur ,Dindigul ,Virudhunagar ,government ,Central , 6 Medical Colleges, Tirupur, Dindigul and Virudhunagar
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...