×

நாராயணபுரத்தில் மாட்டு தொழுவமான அரசு பள்ளி வளாகம்: மாணவர்கள் கடும் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மாடுகள் தங்குவதால், அங்கு துர்நாற்றம் வீசி வருவதோடு, கொசுக்கள் உற்பத்தியாவதால் மாணவர்களுக்கு டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் கிராமத்தில், தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியில் 60 மாணவர்களும், அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகளும் படிக்கின்றனர்.
இந்நிலையில், இரு கட்டிடங்களுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் பள்ளி வாகத்திற்குள் புகுந்து, வராண்டாவில் தங்குகின்றன. இந்த மாடுகள் அங்கேயே சாணத்தையும் போட்டுவிட்டு செல்கிறது. மறுநாள் காலை பள்ளிக்கு வரும் மாணவர்கள், அவற்றை சுத்தம் செய்யும் அவலநிலை உள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களுக்கு டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே காலியிடத்தில் மாணவர்கள் விளையாடி வந்தனர். கடந்த சில ஆண்டாக, இங்கு மாடுகள் கட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால், மாணவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். பெரும்பாலும், 14 வயதுக்கு குறைவான குழந்தைகளே, எளிதில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதிலும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும், குழந்தைகள் பலருக்கு காய்ச்சல் இருப்பது, சுகாதார துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி, மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Narayanapuram ,Government school complex , Narayanapuram, Cow Prayer, Government School Complex
× RELATED மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை