மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 5 வாசல்கள் உள்ளன. இதில் தீ விபத்துக்கு பிறகு சுவாமி சன்னதியான கிழக்கு கோபுர வாசல் தற்காலிகமாக மூடப்பட்டது. மீதியுள்ள அம்மன் சன்னதி, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு கோபுர வாசல்கள் வழியாக தினமும் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீனாட்சி அம்மனை தரிசிக்க வருகின்றனர். கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வரும் 27ம் தேதி (தீபாவளி முதல்) பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தினமும் 20 ஆயிரம் லட்டு தயாரிக்க கோயிலுக்குள் அமைந்துள்ள மடப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதற்காக அங்கு சிலிண்டர் காஸ் ராட்சத அடுப்பு வைக்க வேண்டும். இதற்கு தீயணைப்பு துறையின் ‘‘ஆட்சேபனை இல்லா சான்றிதழ்’’  தேவை. இதனை அளிக்குமாறு கோயில் நிர்வாகம்  கோரியது.  ஆனால், இதுவரை அச்சான்றிதழை தீயணைப்பு துறையினர் வழங்கவில்லை எனத் தெரிகிறது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நள்ளிரவு மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது லட்டு தயாரிக்க திட்டமிட்டுள்ள மடப்பள்ளியிலும் சிலிண்டர் காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இரு தீ விபத்துகளுக்கு பின் பாதுகாப்பு கருதி, ‘கோயிலுக்குள் அடுப்பு வைக்க வேண்டாம். வெளியே வைத்துக் கொள்ளுங்கள்’ என தீயணைப்புதுறை அறிவுறுத்தியுள்ளது. இதனை கோயில் நிர்வாகம் ஏற்க மறுப்பதால், தீயணைப்பு துறை அனுமதி வழங்குவதில்  இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில், லட்டு தயாரிப்பதற்காக செகந்திரபாத்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், நவீன இயந்திரத்தை கோயில் நிர்வாகம் வாங்கியுள்ளது. அந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லட்டுகள் மட்டும் தயாரிக்க முடியும். தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டால் 12 ஆயிரம் லட்டுகள் மட்டுமே தயாரிக்க முடியும். இதையடுத்து முதல் கட்டமாக வரும் தீபாவளி முதல் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அம்மன் சன்னதியில் தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களுக்கு இந்த லட்டுகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், ‘திட்டமிட்டபடி வரும் தீபாவளி முதல் பிரசாதமாக பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும். ஐயப்பன் சீசன், கோயில் திருவிழா உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது, கூடுதல் லட்டு தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்’ என்றனர்.

Related Stories:

>