×

ரசிகர்கள் எண்ணிக்கை குறைவதால் இந்தியாவில் வலுவான 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்: விராட் கோலி வலியுறுத்தல்

ராஞ்சி: வெளிநாடுகளில் உள்ளது போன்று இந்தியாவிலும் குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார். இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 டெஸ்ட் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், புனே, ராஞ்சியில் நடைபெற்றது. இந்த தொடரில் ரசிகர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது. சில நாட்கள் மைதானம் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. இந்தியாவில் மொத்தம் 27 மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 2000-ம் ஆண்டுக்கு பிறகு மட்டும் 18 ஸ்டேடியங்களில் டெஸ்ட் போட்டி அரங்கேறி இருக்கிறது.

வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவில் பெரிய அணிகள் வரும்போது மெல்போர்ன், அடிலெய்டு, பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் ஆகிய மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் லண்டன் லார்ட்ஸ், ஓவல், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், நாட்டிங்காம் ஆகிய இடங்களில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்தும் இத்தகைய பாணியையே பின்பற்றுகின்றன. இதே போல் இந்தியாவிலும் பாரம்பரியமிக்க, பிரபலமான இடங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா, மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, மொஹாலி, நாக்பூர் போன்ற இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது எப்போதும் அமோக வரவேற்பு கிடைப்பது உண்டு. அதனால் இந்தியாவில் வலுவான 5 டெஸ்ட் மைதானங்கள் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்றும் அவர் கூறியுள்ளார். இங்கு வரும் வெளிநாட்டு அணிகள் தாங்கள் இந்த 5 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : grounds ,Test matches ,Virat Kohli ,India ,fans , Fans, India, Stadium, Test match, Virat Kohli
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...