×

வரி ஏய்ப்பு, ஹவாலா பண பறிமாற்றம் உள்ளிட்ட பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன்

கர்நாடகா: வரி ஏய்ப்பு, ஹவாலா பண பறிமாற்றம் உள்ளிட்ட பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமாக 317 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், அவற்றின் மூலம் 200 கோடி ரூபாய் வரை முறையற்ற பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான பணமோசடி மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜரான சிவக்குமாரை, கடந்த 3ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை கைது செய்தது. அவரிடமும், அவரது மகள் ஐஸ்வர்யாவிடமும் வியாழக்கிழமை அன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. தந்தையுடன் சேர்ந்து சிங்கப்பூர் சென்ற போது ஹவாலா பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததா?? என்று அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை, டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

அதில், சிவக்குமாருக்கும், அவரது உறவினர்களுக்கும் சொந்தமாக 20 வங்கிகளில் 317 கணக்குகள் இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. 800 கோடி ரூபாய் அளவுக்கு பினாமி சொத்துகள் இருப்பதாகவும் 200 கோடி ரூபாய் அளவுக்கு முறையற்ற பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. எனவே சிவக்குமாரை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அப்போது, சிவக்குமாரின் உடல்நலனைக் காரணம் காட்டி அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹார், சிவக்குமாரின் உடல்நலனை கவனித்துக் கொள்ள அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டதுடன், 5 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி அளித்தார்.

இதையடுத்து ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் 25 லட்சம் ரூபாய்க்கு பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சிவக்குமாருக்கு ஜாமின் வழங்கியது. வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : DK Sivakumar ,Karnataka , Former Karnataka minister , DK Sivakumar , gets bail , case of money , laundering case
× RELATED கர்நாடக துணை முதலமைச்சர்...