×

தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில், மதுரைக்கு இயக்கம் நெல்லை கோட்டத்திற்கு 5 ஏசி பஸ்கள் ஒதுக்கீடு

*ரூ.60 கட்டணத்தில் தூத்துக்குடிக்கு குளுகுளு பயணம்


நெல்லை :  தினகரன் செய்தி எதிரொலியாக அரசு போக்குவரத்து கழகம் நெல்லை கோட்டத்துக்கு 5 குளிர்சாதன வசதி கொண்ட புதிய பஸ்களை ஒதுக்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் பழைய வழித்தடத்தில் நேற்று முதல் ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவைகள் மூலம் 22 ஆயிரம் அரசு பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

 இதில் விரைவு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன வசதியுடன் படுக்கை வசதி கொண்ட பஸ்கள், இருக்கை வசதி கொண்ட ஏசி பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், கழிவறை வசதி கொண்ட பஸ்கள் நீண்ட தூரங்களுக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என 8 கோட்டங்கள் மூலம் பல்வேறு வழித்தடங்களில் பைபாஸ் ரைடர், ஒன் டூ ஒன், எண்ட் டூ எண்ட் என பயண நேர சேமிப்பு பஸ்களாக இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காற்று மாசுபடுவதை தடுக்க மின்சார பஸ்களை இயக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 64 நகரங்களில் 5 ஆயிரத்து 595 மின்சார பஸ்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் டெல்லி, மும்பை, அகமதாபாத் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 64 நகரங்களுக்கு மின்சார பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு 525 மின்சார பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை கோட்டம் புறக்கணிக்கப்பட்டது.

இதுபோல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஏசியுடன் இரு இருக்கை மற்றும் மூன்று இருக்கைகள் வசதி கொண்ட 50 புதிய ஏசி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதிலும் நெல்லை கோட்டத்துக்கு ஏசி பஸ்கள் ஒதுக்கீடு இல்லை. இதனால் அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டம் புறக்கணிக்கப்பட்டு வந்தது குறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதையடுத்து முதற்கட்டமாக நெல்லை கோட்டத்துக்கு இருக்கையுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட 5 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் நெல்லை மண்டலத்துக்கு 3 பஸ்கள், தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களுக்கு தலா ஒரு ஏசி பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒன் டூ ஒன் பஸ்சில் பழைய கட்டணம் ரூ. 50, தற்போது இயக்கப்படும் ஏசி பஸ்சில் கூடுதலாக ரூ. 10 சேர்த்து ரூ.60 கட்டணத்திலும், நெல்லையில் இருந்து தென்காசிக்கு ஒன் டூ ஓன் பழைய கட்டணம் ரூ.60, ஏசி பஸ்சிற்கு கூடுதலாக ரூ.12 சேர்த்து ரூ.72 கட்டணத்திலும், நெல்லையில் இருந்து மதுரைக்கு பழைய கட்டணம் ரூ. 153, ஏசி பஸ்சிற்கு கூடுதலாக ரூ. 37 சேர்த்து ரூ.190 கட்டணத்திலும் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு ஏசி பஸ் கட்டணம் ரூ. 82ம் வசூலிக்கப்படுகிறது.  பழைய வழித்தடங்களில் புதிய ஏசி பஸ்கள் எண்ட் டூ எண்ட், 1 டூ 1, பைபாஸ் ரைடர் என்ற பெயரில் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.

Tags : AC ,Madurai ,Bus Depot ,Tuticorin ,Nagercoil ,Tenkasi ,Tirunelveli , Nagarcoil,Madurai ,thoothukudi,Tirunelveli ,Ac buses, Government Bus
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...