×

ராமேஸ்வரம் தீவில் கொட்டித் தீர்த்தது கனமழை: மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் பரிதவிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பெய்த கனமழையால் கிராமங்களில் மழை நீர் புகுந்ததால் மக்கள், குழந்தைகள் பரிதவித்தனர். பாதிக்கப்பட்டோரை தங்க வைப்பதற்காக 148 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு துவங்கி விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால் ராமேஸ்வரம் பகுதி சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்படைந்தனர். மேலும், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, கலாம் நினைவிடம் முன்பும் தண்ணீர் தேங்கி நின்றது. பாம்பனில் பெய்த கனமழையால் சின்னப்பாலம், தோப்புக்காடு மீனவ கிராமங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பாத்திரங்கள், பொருட்கள் தண்ணீரில் மிதந்தன. குழந்தைகள் கதறி அழுதன. குழந்தைகளை வீட்டில் தொட்டில் கட்டி உட்கார வைத்திருந்தனர். மேலும், தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தத்தளித்தனர். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், மண்டம் ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்துறையினரும், பாம்பன் பஞ்சாயத்து நிர்வாக ஊழியர்களும் மீனவ கிராமங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பாம்பன் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்ட ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சில மணிநேரம் பெய்த மழைக்கே ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்குவதால் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையை சமாளிக்க ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் இப்போதிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையினால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசரகால மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டு மழையினால் பாதிப்பு உண்டாகும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்கள் முகாமில் தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 148 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. இங்கு தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கப்படும். தண்ணீர் தேங்கிய பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் வசிக்கும் மக்கள் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மாவட்டத்தில் எடுக்க வேண்டிய அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சராசரியாக 68.85 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாம்பனில் - 183 மிமீ, மண்டபத்தில் - 176.90 மிமீ, தங்கச்சிமடத்தில் - 168.30 மிமீ மற்றும் ராமேஸ்வரத்தில் - 165.10 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Tags : Rameswaram Island Rameswaram , Rameswaram
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...