×

புதுச்சேரி காரைக்காலில் திரைப்பட பாணியில் மதுபான விடுதியை சூறையாடிய மர்மநபர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் தனியார் மதுபான விடுதிக்குள் புகுந்த மர்மநபர்கள் திரைப்படக்காட்சியில் வருவதைப்போல கடையை சூறையாடிச் சென்றனர். புதுச்சேரி காரைக்கால் அருகே மேலவாஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பார் மிகவும் பிரபலமானது எனக் கூறப்படுகிறது. எப்போதும் மதுப்பிரியர்களின் கூட்டத்தில் நிரம்பிக் கிடக்கும் இந்தக்கடையின் விடுதிக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விடுதியைச் சூறையாடினர்.

முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டை உள்ளிட்டை ஆயுதங்களால் திரைப்படங்களின் சண்டைக்காட்சி போல இந்தச் சூறையாடும் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். மதுபான விடுதியின் மேலாளர் கணபதி அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த பட்டினம் பகுதி காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இந்த மதுபானக்கடையில் ராம், மாதேஷ் மற்றும் சிவகாளிமுத்து ஆகியோருக்கு கூட்டு உரிமை உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பங்குதாரர்களில் இருவர் மறைந்த பிரபல சாராய வியாபாரி ராதாகிருஷ்ணனின் மகன்கள் என்பதால், அவர்களது உறவினர்கள் யாரேனும் சொத்தில் பங்கு கேட்டு இந்தத் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மர்மநபர்கள் சூறையாடியதில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் மதுப்பிரியர்களின் கூட்டத்தில் நிரம்பிக் கிடக்கும் கடையில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pirichery ,Karaikal Puducherry ,Karaikal ,Film Style ,Brewery ,Mysterious People , Puducherry, Karaikal, Film style, Brewery, Looted, Mysterious people
× RELATED புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு