×

தொடர் மழை காரணமாக இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: தொடர் மழை காரணமாக இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான  120 அடியை மேட்டூர் அணை எட்டியது. எனவே 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 16,227 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 16,239 கனஅடியாக சற்று அதிகரித்தது. அப்போது, அணையின் நீர்மட்டம் 118.60 அடியாக இருந்தது. அதேவேளையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனால் நீர்மட்டம் மள மளவென உயர்ந்தது.  நேற்று 8 மணி நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து  விநாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரித்தது. அப்போது, அணையின் நீர்மட்டம் 119.33 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 92.40 டிஎம்சி. அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 3வது முறையாக இன்று அதிகாலை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

இதனால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்களில்  தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Mettur Dam ,Cauvery , Continuous Rain, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு