உபி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு வெட்கக்கேடானது: பிரியங்கா காட்டம்

ரேபரேலி: உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2017 ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பாக  ேதசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் 3.5 லட்சம் குற்றங்கள் ெபண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளதாகவும், இதில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரசேத்தில் 56,011 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதில் நாட்டில் முதலிடத்தை உத்தர பிரதேசம் பிடித்துள்ளது. இது வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பாஜ தலைமையிலான மத்திய அரசை குற்றம்சாட்டி செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 18 வயது முதல் 31 வயது வரையிலான மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த அரசு ஏழைகளை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. அவர்கள் நினைப்பதெல்லாம் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து மட்டுமே. மோடி அரசு ஒருபோதும் விவசாயிகள் பற்றி கவலை கொள்வதில்லை. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணம் பொதுமக்களிடம் இல்லை. ஏழைகளின் பைகளில் பணத்தை வைப்பதற்கு பதிலாக மத்திய அரசு பணக்காரர்களின் பையில் தான் வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக அவர் டிவிட்டர் பதிவில் `நோபல் பரிசு ெபற்ற அபிஜித் பானர்ஜி இடதுசாரி சிந்தனை கொண்டிருப்பது குற்றமா? தங்கள் மீதும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஏழைகள் விரும்புகிறார்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>