ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூர்வாரியபோது வேலூர் கோட்டை அகழியில் நீண்ட சுவர் கண்டுபிடிப்பு: ஆய்வுக்கு வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் கோட்டை அகழி தூர்வாரும் பணியின்போது, அகழியின் நடுவே சுவர் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தொல்லியல்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூர் கோட்டை அகழியை தூர்வாருவது, கோட்டையின் வரலாற்று காட்சிகளை வெளிப்படுத்தும் லேசர் ஷோ காட்சி அரங்கம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் 33 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, தொல்லியல் துறை அனுமதி பெற்று மாநகராட்சி சார்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோட்டை அகழியை சுமார் ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. அகழியில் தண்ணீர் இருப்பதால் 4 ராட்சத மிதவைகள் கொண்டு வரப்பட்டு கிரேன் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது.

அப்போது கல்வெட்டுகள், சிலைகள் மற்றும் புதையல் கிடைக்கவும், சுற்றுச்சுவர் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது என்பதால் தீவிரமாக கண்காணித்து வருவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், கோட்டையின் தெற்கு பகுதியில் திட்டிவாசலுக்கு செல்லும் பழைய பாதை அருகில் கடந்த மாதம் ஊழியர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தண்ணீருக்கு அடியில் நீளமான தடுப்பு சுவர் சேற்றில் புதைந்திருப்பதாக தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அந்த தடுப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தூர்வாரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.இதையடுத்து சேற்றில் புதைந்திருந்த தடுப்பு சுவரின் ஒரு பக்கம் மட்டும் தூர்வாரும் பணிகள் நடந்தது. தொடர்ந்து தண்ணீர் ஒருபுறமாக வடியும் வரை அந்த பகுதியில் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும் நீளமான தடுப்பு சுவரின் மறுபக்கம் தூர்வாரும் பணி நடந்தது. அப்போது, அகழியில் சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்ட நீளமான சுவர் வெளியே தெரிந்தது.

இதுவரையிலும் வெளியே தெரியாமல் புதைந்திருந்த இந்த சுவர் வெள்ளை கலரில் வெளியே தெரிவதால் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தூர்வாரும் பணியில் இதுவரை புதையல் எதுவும் கிடைக்காத நிலையில், கோட்டையின் தெற்கு திட்டிவாசலுக்கு செல்லும் நடைபாதை கட்டுமானத்தின் இடதுபுறம் நீளமான சுண்ணாம்பால் ஆன தடுப்புச்சுவர் வெளியே தெரிகிறது. எதற்காக இந்த சுவர் அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை’ என்றனர். எனவே, எதற்காக தடுப்பணை போன்ற சுண்ணாம்பு சுவர் கட்டப்பட்டது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள அறை ஆய்வு எப்போது?

வேலூர் கோட்டை வளாகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வந்த கட்டிடத்துக்கு எதிரே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மரக்கன்று நடுவதற்கு கடப்பாரையால் பள்ளம் தோண்ட முயன்றனர். அப்போது கடப்பாரை திடீரென்று பூமிக்கு உள்ளே சென்றுவிட்டது. இத்தகவல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த தொல்லியல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டினர். அப்போது, பாதாள அறை இருப்பது தெரிய வந்தது. ஆனால்,  பாதாள அறை குறித்து பிறகு ஆய்வு நடத்தப்படும் என்று கூறி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதுவரை முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories:

>