×

போலீஸ் துரத்தியபோது கிணற்றில் விழுந்து ரவுடி பலி

செய்யாறு: செய்யாறு அருகே போலீசார் துரத்தியபோது பிரபல ரவுடி கிணற்றில் விழுந்து பலியானார். மதுரை மாவட்டம் சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் பாட்டில் மணி(32). இவனது கூட்டாளி திருநெல்வேலி அடுத்த காழியூத்து கிராமத்தை சேர்ந்த குண்டு கார்த்திக்(35). இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடிகள். இவர்களை சென்னை செங்குன்றம் போலீசார் வழக்கில் தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் தனிப்படை போலீசார் பாட்டில் மணியை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் போலீசார் உதவியுடன் பாட்டில் மணியை தேடி வந்தனர்.  10க்கும் மேற்பட்டோர் ஒரு காரில் தூசி நோக்கி சென்றனர்.

அப்போது காஞ்சிபுரம் அருகே கலவை சாலையில் வடமாவந்தல் கிராமம் அருகே போலீசார் தங்களை தூரத்தி வருவதை பார்த்த அவர்கள் காரிலிருந்து இறங்கி நாலாபுறமும் சிதறியோடினர். இதையடுத்து போலீசாரும் காரில் இருந்து இறங்கி அவர்களை துரத்தி சென்றனர். அப்போது குண்டு கார்த்திக் என்பவனை மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் மின்னல் வேகத்தில் தப்பினர். இந்நிலையில் வடமாவந்தல் கிராமத்தில் கன்னியப்பன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் ஒருவர் சடலமாக கிடப்பதாக நேற்று தூசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது இறந்தவர் பிரபல ரவுடி பாட்டில் மணி என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் போலீசார் தூரத்தி சென்றபோது மணி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.


Tags : Rowdy , Rowdy kill , police
× RELATED ரவுடி கொலை