×

திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மழை பெய்யவில்லை ரெட்அலர்ட் கொடுக்கப்பட்ட 4 மாவட்டத்தில் வெயில்

கொடைக்கானல்: ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை  மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தது. அவ்வப்போது லேசான மழையே பெய்தது. தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையத்தால் கனமழைக்கான ரெட்அலர்ட் தரப்பட்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ெரட் அலர்ட் காரணமாக நேற்று மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பகலில் லேசான வெயிலும், மேகமூட்டமாக மட்டுமே காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கொடைக்கானலிலும் சாரல் மழை மட்டுமே பெய்தது. ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பால் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, பேரிஜம் ஏரி, நட்சத்திர ஏரி படகு சவாரி ஆகிய பகுதிகளுக்கு நேற்றும், இன்றும் (அக். 22, 23) சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் பூட்டு போடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. தேனி: தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விட்டிருந்தாலும் எங்கும் மழை பெய்யவில்லை.  போடி பகுதியில் ராசிங்காபுரம், சிங்காரபுரம் பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது. பெரிய அளவில் ஏதும் பாதிப்பில்லை. பொதுமக்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வெளியில் செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் பரபரப்பான இடங்களில் கூட வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். நீலகிரி: நீலகிரியில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்கிறது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ேநற்று மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்  விடுத்தது. இதனால், மாவட்டம் முழுவதும் அதிகாரிகள், மக்கள் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊட்டி, குந்தாவில் நிலச்சரிவு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  47 பேர் அடங்கிய அனைத்துத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு முழுக்க ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மாவட்டத்தில் பெரிய அளவிலான மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. இதற்கிடையே, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பனி மூட்டத்தால் குன்னூர் காட்டேரி அருகே அரசு பஸ் ஒன்று பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட கோவையிலும் நேற்று பெரிய அளவில் மழை பெய்யவில்லை. பகலில் லேசான வெயில் அடித்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். ராமேஸ்வரம் தீவில் மக்கள் தத்தளிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாம்பனில் சின்னப்பாலம், தோப்புக்காடு ஆகிய மீனவ கிராமங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பாத்திரங்கள், பொருட்கள் தண்ணீரில் மிதந்தன. தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் விடிய விடிய தத்தளித்தனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அரசு டெப்போவில் சுற்றுச்சுவர் திடீரென நேற்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இடிபாடுகள் விழுந்ததில் 10 பஸ்கள் சேதமடைந்தன.

நாகையில் 25 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு: நாகையில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணி முதல் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொறையாரில் இருந்து காத்தான்சாவடிக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாதை துண்டிக்கபட்டதால் ஆக்கூர், திருக்கடையூர் உள்ளிட்ட 25 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், திருச்சியில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது.

கார்களை அடித்து சென்ற காட்டாற்று வெள்ளம்
மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தபோது, பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 9 மணியளவில் தேக்கம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரில் தேக்கம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். தொட்டதாசனூர் பகுதியில் வந்தபோது, கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மரத்தில் மோதி நின்றது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கார்த்திக்கை மீட்டனர். இதேபோல், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் சாலையில் ஒரு கார், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மரத்தில் மோதியது. இந்த காரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு காரமடையை சேர்ந்த குமார், (38), முருகன் (40) ஆகிய இருவரையும் காப்பாற்றினர்.

Tags : Dindigul ,Theni ,Nilgiris ,Coimbatore , Dindigul, Theni, Nilgiris, Coimbatore, rain, sun
× RELATED திண்டுக்கல் எல்லைப்பட்டியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு