×

அண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் துப்பாக்கி முனையில் மயிலை ரவுடி கைது

* மேல்மலையனூரில் போலீசார் சுற்றிவளைத்தனர்
* கள்ள துப்பாக்கி, 4 பட்டாக்கத்திகள் பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் இருதரப்பு மோதிக்கொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மயிலாப்பூர் ரவுடியை கூட்டாளியுடன் போலீசார் துப்பாக்கி முனையில் கைது ெசய்தனர். அவனிடம் இருந்த கள்ள துப்பாக்கி, 4 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அண்ணாசாலையில் காசினோ திரையரங்கம் அருகே கடந்த 10ம் தேதி மதியம், முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதையடுத்து, நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவியும், வக்கீலுமான மலர்க்கொடி (50), அவரது மகன் அழகுராஜா (31), இவர்களது ஆதரவாளர்கள் திண்டிவனத்தை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பல்லாவரத்தை சேர்ந்த ரவுடி கவுதமன், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து, பெண் வக்கீல் மலர்க்கொடி மற்றும் அவரது மகன் அழகுராஜாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக, மயிலாப்பூர் பிரபல ரவுடியான சிவகுமாரின் ஆதரவாளர்களான திருவல்லிக்கேணியை ேசர்ந்த ஜெகதீசன் (27), அருண் (27), ராயப்பேட்டையை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (28) ஆகிய 3 ரவுடிகள் கடந்த வாரம் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியான மயிலாப்பூர் பிரபல ரவுடி சிவகுமார் (40) தொடர்ந்து போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தான். பின்னர் தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் ரவுடி சிவகுமாரை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது நேற்று முன்தினம் நள்ளிரவு துப்பாக்கி முனைவில் கைது செய்தனர்.

அவனுடன் தங்கி இருந்த மற்றொரு ரவுடியான ராஜ்குமார் (24) என்பவனும் கைது செய்யப்பட்டான். இருவரிடம் இருந்தும் ஒரு கள்ள துப்பாக்கி, 4 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ரவுடி சிவகுமார் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், அடிதடி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மெரினா, ராயப்பேட்டை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Roundy ,arrest ,Gunpoint ,Rowdy , Rowdy arrested ,gunpoint
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...