×

தொடங்கியது வடகிழக்கு பருவமழை சென்னையில் 57 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை

* பொதுமக்கள் தாமாக முன்வந்து அமைக்க அதிகாரிகள் வலியுறுத்தல்

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 3 லட்சம் வீடுகளில் 57 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு கோடை காலத்தில் வரலாறு காணாத வறட்சி காரணமாக சென்னை மாநகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டது. இதனால் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதேபோல், புறநகர் பகுதியில் உள்ள ஏரி, கல் குட்டைகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டது. எனவே, வரும் காலங்களில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும்  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. மேலும் இவற்றை ஆய்வு செய்ய குழுக்களும் அமைக்கப்பட்டன. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஆய்வு செய்ய வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுக்கள் வீடுவீடாக சென்று மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவழைக்கு முன்பாக வார்டுக்கு 1000 வீடுகள் வீதம் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது வரை இந்த குழுக்கள் 3,05,925 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் 1,99,821 கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 36,911 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட வேண்டும். மேலும் 24,701 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.  இதைத் தவிர்த்து 57,170 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.  மேலும் ஆய்வு செய்யும் ேபாது ஏற்கனவே  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள கட்டிடங்களில் நீல நிற வில்லைகளும்,  புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் பச்சை  நிற வில்லைகளும் ஒட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 52,596 வீடுகளில் வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சென்னையில் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதியை உறுதி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி தற்போது 2.24 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆய்வு செய்ததில் இன்னும் 57 ஆயிரம் வீடுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டுவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு வசதியாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பெய்து வரும் வடகிழக்கு பருவமழை நீரை முழுமையாக சேமித்தால் வரும் ஆண்டில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு பாதியாக குறையும்.  இவ்வாறு அவர் கூறினார்.

71 இடங்களில் ஆய்வு

மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பு தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் 71 இடங்களில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி தங்களின் பகுதியின் மண் தன்மைக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்து கொள்ளலாம்.



Tags : households ,Chennai , Northeast Monsoon ,Chennai 57,000 households, rainwater harvesting structure
× RELATED ஏப்.3 முதல் தீவிர பிரசாரம் 8 கோடி...