×

காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கு விருது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்

சென்னை: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்கி கவுரவிக்கிறார்.காவல் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை,  ஊர்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு துறை, தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த  வகையில் நாளை சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்குகிறார். மேலும், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காஞ்சிரபும் மாவட்டத்தில் 40 நாட்களாக இரவு பகலாக  அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் தொடக்கத்தில் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நேரு உள்விளையாட்டு  அரங்கம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விருது பெறும் போலீசார் இன்று சென்னை வந்தனர். நாளைய விழாவில் 596 பேருக்கு குடியரசு தலைவர் மற்றும் முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படுகிறது.  அத்திவரதர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 60 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Tags : policeman ,Kanchipuram , Kanchipuram Acting Presidential Dept.
× RELATED கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர...