×

ஓட்டுப்போடு இல்லேன்னா வாங்கின காச தா...வீடு தேடி சென்று வாக்காளர்களை அழைத்து வந்த அரசியல் கட்சிகள்...வாக்குப்பதிவில் ருசிகரம்

நெல்லை: தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் இடைத்தேர்தல் இலக்கணத்திற்கு எவ்வித பஞ்சமும் இல்லாமல் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்லும் நேற்று நடந்து முடிந்தது. தொகுதி முழுவதும் மதுபானங்கள் ஆறாய் ஓட, சிக்கன் பிரியாணி,  பணப்பட்டுவாடா இத்யாதிகளோடு அரசியல் கட்சிகள் ஜமாய்த்தன. ஆயிரமும், இரண்டாயிரமும் அரசியல் கட்சிகளின் பணபலத்திற்கு ஏற்ப தொகுதியில் விதைக்கப்பட்டன.அரசியல் கட்சிகளின் அன்பளிப்பை மனமுவந்து பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், தேர்தல் நேரத்தில் பல்டி அடித்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 84 சதவீதம் வாக்குப்பதிவு நடந்த நிலையில், நாங்குநேரியில் 66 சதவீதம் மட்டுமே  வாக்குப்பதிவு நடந்தது.

அதிலும் பணப்புழக்கம் இந்தளவுக்கு இல்லாத கடந்த 2006 சட்டசபை தேர்தலை விட 5 சதவீதம் குறைவான வாக்குப்பதிவே நாங்குநேரியில் நடந்தது.‘‘வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம ஓட்டு போடுவாங்கன்னு  நினைச்சா, இப்படி ஏமாத்திப்புட்டாங்களே’’ என நேற்று பிற்பகலில் அரசியல் கட்சியினர் புலம்ப ஆரம்பித்தனர். வாக்காளர் பட்டியலை கையில் வைத்திருந்த சில ஆளும்கட்சி பிரமுகர்கள், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஓட்டு போடாதவர்கள்  பட்டியலை கணக்கெடுத்தனர். அவர்களை வீடுகளுக்கே தேடிச்சென்று வாக்குசாவடிகளுக்கு அழைத்து வந்தனர்.கையில் சிக்காத வாக்காளர்களை ‘துட்ட வாங்கிட்டு எங்கப்பா ஓடி போயிட்ட’’ என அலைபேசியில் அன்போடு அழைத்தனர்.

அரசியல்  கட்சிகளின் இந்த அன்பான துரத்தலில் சிலர் சிக்கி வாக்குசாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி சென்றனர். சில கிராமங்கள் பணத்தையும் பெற்றுக்கொண்டு, ஓட்டு போட வாக்குசாவடிக்கும் வரவில்லை. அங்கு சென்று அரசியல்  கட்சியினர் ‘ஓட்டு போட வாருங்கள் அல்லது பணத்தை திரும்ப தாருங்கள்’ என மல்லுக்கு நின்றனர்.அதற்கு அக்கிராம மக்கள் ‘‘நாங்கள் வாங்கிய பணத்தை திரும்ப தருகிறோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் அப்பணத்தை பெற்று கொள்ள வேண்டும்’’ என அதிரடியாக கூறினர். இதன் விளைவாக அரசியல் கட்சியினர்  அங்கிருந்து வெளியேறினர். பணத்தையும் வாங்கிட்டு இப்படி பல்டி அடிச்சாட்டாங்களே என அரசியல் கட்சியினர் நேற்று இரவு வரை புலம்பி கொண்டிருந்தனர்.

Tags : parties ,voters ,home , Political parties that took voters home ...
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...