×

எந்த நாட்டையும் இந்தியா ஆக்கிரமித்ததும் இல்லை: அத்துமீறுபவர்களை பதிலடி கொடுக்க தயங்கியதும் இல்லை...ராஜ்நாத் சிங் பேச்சு

மும்பை: இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் வலிய சண்டைக்கு சென்றதில்லை, ஆனால் அத்துமீறுபவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். காஷ்மீரில்  தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவையும் மத்திய அரசு ரத்து செய்தது. இது பாகிஸ்தானை மேலும் ஆத்திரப்படுத்தியது. சர்வதேச நாடுகளிடம் இந்தியாவுக்கு, எதிராக பாகிஸ்தான்  புகார் தெரிவித்தது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என மற்ற நாடுகளும் கைவிரித்துவிட்டன.

இதனால் காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் ஏராளமான தீவிரவாதிகள், காஷ்மீருக்குள் நுழைய காத்திருந்தனர்.  இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைப்பதற்காக எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இதில் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தங்தர் பகுதியில் காவல் பணியில்  ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்குதல் பகுதியில் உள்ள 4 தீவிரவாத முகாம்களை நோக்கி, இந்திய ராணுவத்தினர்  நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் பலியாயினர். இதற்கு பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் அகமது, இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என கூறினார்.

எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், ‘‘இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில், எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள 3 தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.  4வது முகாம் பலத்த சேதமடைந்துள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் முதல் 10 பேர் வரை பலியாகி இருக்லகாம் என தெரிகிறது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் விளக்கியுள்ளோம்.  பாகிஸ்தான் மீதான தாக்குதலில் அரசியல் தலைமையும், ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.’’ என்றார்.

இந்நிலையில், மும்பையில் கடற்படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்த பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் வலிய சண்டைக்கு  சென்றதில்லை. ஒரு அங்குல அந்நிய நிலப்பரப்பைக் கூட ஆக்கிரமித்தது இல்லை. அதே நேரத்தில் அத்துமீறல் நடக்கும்போது தகுந்த பதிலடி கொடுக்க நம் படைகள் தயங்கியதில்லை என்று தெரிவித்தார்.

எந்த நாட்டையும் இந்தியா ஆக்கிரமித்ததும் இல்லை, பிற நாட்டின் பகுதிகளில் ஒரு அங்குலத்தை கூட கைப்பற்றியதும் இல்லை என்றும் கூறினார். மும்பை பயங்கரவாத் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி  செய்ய கடற்படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும், கடற்படையின் கண்காணிப்பின்கீழ் இந்திய கடற்பகுதி மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிக்க  தகுந்த பதிலடி கொடுக்கும் திறன், நமது பாதுகாப்புப் படைகளிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.


Tags : India ,country ,Never ,transgressors ,Rajnath Singh , India has never invaded any country and has not hesitated to retaliate against the transgressors ... Rajnath Singh
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது...