×

ஹைமாஸ் விளக்குகள் எரியவில்லை இருளில் மூழ்கி கிடக்கும் மூணாறு

*சுற்றுலா பயணிகள் அவதி

மூணாறு : மூணாறில் பல லட்சம் செலவு செய்து  பஞ்சாயத்து சார்பாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மூணாறு இருளில் மூழ்கி காணப்படுகிறது. மூணாறில் 5 வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்து சார்பாக பல லட்சங்கள் செலவு செய்து  டவுன், நல்லதண்ணி எஸ்டேட் வாகன நிறுத்துமிடம், தபால் அலுவலக  சந்திப்பு, பி.எஸ்.என்.எல் அலுவலகம் சந்திப்பு, பெரியவாரை எஸ்டேட் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட 12 பகுதிகளில் ஹைமாஸ் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

மின் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில் ஒரு விளக்குகூட எரியாத நிலையில் மூணாறு இருளில் மூழ்கி கிடந்தது. மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசியல் கட்சிகள் இது சம்பந்தமாக பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர். அதன் பலனாக சில மாதங்கள் மின் விளக்குகள் எரிந்தன. தற்பொழுது மீண்டும் மின் விளக்குகள் செயலிழந்து காணப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறு இருளில் மூழ்கியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மின் விளக்குகள் எரியாத காரணத்தால் இரவு நேரங்களில் சட்டவிரோதமான செயல்கள் நிகழ வாய்ப்புள்ளது. இரவும் நேரங்களில் மூணாறுக்கு வந்து சேரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே பஞ்சாயத்து அதிகாரிகள் இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் .

Tags : Hyamus ,Hymas ,Munnar ,Tourist , Munnar,Hymas lights,Tourist
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...