×

தொடர் மழையால் மலர்கள் அழுகின தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்

ஊட்டி : தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை கொட்டி வருகிறது. நாள் தோறும் மழை பெய்வதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிரும் வாட்டி வருகிறது. இரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக் குலுங்கின.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், பூங்கா சேறும் சகதியுமாறியுள்ளது. மேலும், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மேரிகோல்டு, டேலியாக ஆகிய மலர்கள் முற்றிலும் அழுகிவிட்டன. இதனால், பூங்காவில் அழுகிய நிலையில் இருந்த மேரிகோல்டு மலர்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. அதேபோல், டேலியா மலர்களும் அகற்றப்பட்டுவிட்டன. குறிப்பாக, பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மேரிகோல்டு மலர்கள் அகற்றப்பட்டு அங்கு, அலங்கார செடிகளை கொண்டு, புதிய வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரத்தில் இருந்த மேரிகோல்டு மலர் செடிகள் அகற்றப்பட்டு அங்கும் அலங்கார செடிகள் கொண்ட தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. பெர்னஸ் புல் மைதானம் சேறும் சகதியுமாக மாறிய நிலையில், அங்கு 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் தற்போது அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மாடங்களில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் தொட்டிகளில் உள்ள மலர் செடிகளும் அழுகி வருகின்றன.

 இதில், பாதிக்கப்பட்ட மலர் தொட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து மலர் செடிகளும் அழுகி முன்னதாகவே அனைத்து மலர் அலங்காரங்களும் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால், தோட்டக்கலைத்துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.


Tags : Botanical Gardens ,Continuous Rain. The Botanic Gardens , Flower Decoration,Botanic Gardens,heavy rain,ooty
× RELATED குன்னூரில் பூத்து குலுங்கும் சேவல்...