×

பட்டுப்போனவை என்ற போர்வையில் ஆத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் 20 டன் மரங்கள் வெட்டி கடத்தல்

*₹800க்கு ஏலம் எடுத்ததாக தகவல்

ஆத்தூர் : ஆத்தூர் அரசு பள்ளி வளாகத்தில், பட்டுப்போன மரங்கள் எனக்கூறி, சுமார் 20 டன் நல்ல மரங்களை வெட்டி கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த மரங்கள் வெறும் ₹800க்கு ஏலம் விட்டதாக அதிகாரி தெரிவித்தது, சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நேற்று பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரங்களை, சிலர் வெட்டி லாரிகளில் எடுத்துச்சென்றனர். இதுகுறித்த தகவலறிந்த சமூக ஆர்வலர்கள், மரங்களை வெட்டியவர்களிடம் கேட்டபோது, அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் தான், ஏலம் எடுத்து மரங்களை வெட்டுவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவி பொறியாளர் ஜெய்சங்கர், அரசுப்பள்ளி வளாகத்தில் பட்டுப்போன மரங்கள் இருப்பதாகவும், அவற்றை அகற்றவேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில், கடந்த மாதம் ஏலம் நடத்தப்பட்டது. அதில் பட்டுப்போன மரங்கள் ₹800க்கு ஏலம் விடப்பட்டது. அந்த மரங்களை தான், தற்போது ஏலம் எடுத்தவர்கள் வெட்டி எடுத்துச் செல்கின்றனர் எனக் கூறினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த மாதம் பட்டுப்போன மரங்களை ஏலத்தில் விட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஒரு மாதம் கழித்து விடுமுறை தினத்தில் எந்த அலுவலரும் இல்லாத நேரத்தில் பட்டுப்போன மரங்களுடன், நல்ல மரங்களையும் சுமார் 20 டன் அளவிற்கு வெட்டி 2 லாரிகளில் எடுத்து சென்றுள்ளனர். இந்த மரங்களுக்கு ஏலம் எடுத்தவர் அரசுக்கு செலுத்திய தொகை வெறும் ₹800 மட்டுமே. அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும் என வற்புறுத்தும் இந்த நேரத்தில், பள்ளி வளாகத்தில் நல்ல நிலையில் இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிவதுடன், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 10 மடங்கு மரங்களை பள்ளி வளாகத்தில் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : premises ,plush. ,school ,Athur Government School ,places , Aathur , government school. trees,unidentified places
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி